• Home
  • உள்ளூர் செய்திகள்
  • காலாவதியான மருந்துகள், அழகுசாதனப் பொருட்களை விற்ற நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்: மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு!

காலாவதியான மருந்துகள், அழகுசாதனப் பொருட்களை விற்ற நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்: மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பில் காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் முறையான லேபிள் தகவல்கள் இல்லாத அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காகச் சேமித்து வைத்திருந்த கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கும், அதன் பணிப்பாளருக்கும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ரூ. 1 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் (CAA) கடந்த மே மாதம் 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, குறித்த நிறுவனத்திலிருந்து 640-க்கும் மேற்பட்ட காலாவதியான ஆயுர்வேத மருந்துகளும், கட்டாய லேபிள் விபரங்கள் அற்ற 280-க்கும் அதிகமான அழகுசாதன மற்றும் ஏனைய பொருட்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளர் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளையும் பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் மொத்தமாக ரூ.1 இலட்சம் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், கைப்பற்றப்பட்ட அனைத்து காலாவதியான மருந்துகள் மற்றும் சட்டவிரோத அழகுசாதனப் பொருட்களையும் உடனடியாக அழித்து விடுமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

Share the Post: