பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, அம்பாறை பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் செவ்வாய்க்கிழமை (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முதல் சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், இவ்விருவருக்கும் போதைப்பொருளை விநியோகித்த பொல்வக காலனியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரதான சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 14,700 ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனுஷ்க சதருவான், அனுசங்க வீரசிங்க மற்றும் இசுரு மிஹிரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்ன மற்றும் அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல வழிகாட்டுதலில் அம்பாறைப் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தநாராயணவின் நேரடி மேற்பார்வையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார திசாநாயக்க மற்றும் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனுஷ்க ரத்நாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவின் வழிநடத்தலில், பொலிஸ் கொன்ஸ்டபிள்களான (91287), (95062) மற்றும் பொலிஸ் சாரதி கொன்ஸ்டபிள் ரணசிங்க (89791) ஆகியோர் அடங்கிய குழுவினர் இக்கைது நடவடிக்கையைச் மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இங்ஹினியாகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேனக பண்டாரவின் தலைமையில் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




