நுவரெலியா மாவட்டம் கினிகத்தெனை, பொல்பிட்டியா பகுதியில் இடம்பெற்ற திடீர் மண்மேடு சரிவு விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மண்ணுக்குள் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று இரவோடு இரவாக வீடொன்றின் மீது அருகிலிருந்த மண்மேடு திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இதன்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் மண் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தீவிர மீட்பு நடவடிக்கையின் மூலம், மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் மண் சரிவு அபாயம் நிலவுவதால், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கேட்டுக்கொண்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியா கினிகத்தெனை பொல்பிட்டியாவில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்!






