தற்போது உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக இருக்கின்ற எல்-நினோ (El-nino) காலநிலை மற்றும் அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் எதிர்காலத்தில் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பிரதேச மட்ட அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தும் விதமான விசேட கருத்தரங்கு இன்றைய தினம் செவ்வாய்கிழமை(04.08.2026) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கருத்தரங்கில் உதவிப் பிரதேச செயலாளர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள், சுற்றாடல் பிரிவு உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதள்போது கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் பிரிவு சிரேஸ்ட விரிவுரையாளர் கிருபா ராஜரெட்ணம் அர்களால் குறித்த எல்-நினோ காலநிலை தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது எல்-நினோ நிலைமை ஏற்படும் விதம், அதன் நிலைப்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கப்படுகின்ற விளைவுகள், மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய தெளிவு நிலைகள், இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்ததான தெளிவூட்டல்கள் குறித்த கருத்தரங்கின் மூலம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





