திருகோணமலை:
செய்திகளைத் தருவதோடு நின்றுவிடாமல், எதிர்காலத் தலைமுறையின் கல்வியை வலுப்படுத்தும் உயரிய நோக்கில், கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான 2ஆவது சமூகப் பணித் திட்டமான ‘தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு’ இன்று (04.08.2026) திருகோணமலை சாஹிரா கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
காலை 8:00 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் 88 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதில் சிறப்பு வளவாளராகக் கலந்துகொண்ட முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் பிரபல ஆசிரியர் திரு. ஏ. ஆர். முகம்மது அவர்கள், மாணவர்களுக்குப் பரீட்சையை எதிர்கொள்வதற்கான சிறந்த ஆலோசனைகளையும் நுட்பங்களையும் வழங்கினார்.
கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் ஓ. கியாஸ் ஷாபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்றத்தின் செயலாளர் அமதுரு அமரஜீவ மற்றும் உறுப்பினர் ஏ.எல். அலாவுதீன் பாபு ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சிறப்பு அதிதிகளாகச் சாஹிரா கல்லூரியின் அதிபர் A. S. S. இக்பால் மற்றும் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் A. J. M. யாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சமூகப் பணித் திட்டத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ‘DEO GROUP – Agro Multi Cultivation’ நிறுவனமும், அதன் முகாமையாளர் திரு. எஸ். பிரதீபன் அவர்களும் பூரண அனுசரணை வழங்கி ஆதரவளித்திருந்தனர்.
இம்மன்றத்தின் முதலாவது சமூகப் பணித் திட்டம் கடந்த 02.08.2026 அன்று மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் 110 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கை நடத்துவதற்கு மண்டப வசதிகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய சாஹிரா கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி சமூகத்தினருக்குக் கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.






