மட்டக்களப்பு, கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கடந்த (15.10.2026) அன்று நேரடி கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, குறித்த விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நிலவும் பல்வேறு தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் உதவி விவசாயப் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக்கலந்துரையாடலின் போது:
உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை,
மண் பரிசோதனை மற்றும் பூச்சி-பீடைத் தாக்கப் பரிசோதனைகளுக்கான நவீன ஆய்வுகூட வசதியின்மை,
வாகன வசதி குறைபாடு,
கடமை முடிந்த பின்னர் உத்தியோகத்தர்கள் நீண்ட நேரம் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய போக்குவரத்துச் சிரமங்கள்
உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் உதவி விவசாயப் பணிப்பாளரால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
அதிகாரிகளின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், இப்பிரச்சினைகள் குறித்து விரைவில் விவசாய அமைச்சரிடமும், அமைச்சு சார்ந்த உயர்மட்டக் கூட்டங்களிலும் எடுத்துரைத்து, நிலையத்தின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விரைவான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக, கடந்த 07.10.2026 அன்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தை மீளக் கட்டியெழுப்புவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் விவசாயத் துறையை பெருமளவில் மேம்படுத்த முடியும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக் கள விஜயத்தின் போது ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன் மற்றும் கா.நாகேந்திரன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினருடன் உடன் சென்றிருந்தனர்.





