(கனகராஜா சரவணன்)
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது எனவே காலாவதியாகாத இந்த ஒப்பந்தின் சரத்தின்படி புலம்பெயர் தேசத்தில் இன்று வரை தடைசெய்யப்பட்ட சில தமிழ் மக்கள் மற்றும் சில தமிழ் அமைப்புக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் இது தொடர்பாக இந்திய அரசும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
ஈரோஸ்; கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் போராட்டத்தின் உச்சகட்டம் தான் வடக்கு கிழக்கு உட்பட 9 மாகாணங்களுக்கான மாகாணசபை ஆட்சி முறை வந்தது இந்த மாகாணசபை ஆட்சி முறை வருவதற்காக தமிழ் மக்கள் விலை மதிக்க முடியாத உயிர் தியாகம் சொத்துகள் உட்பட பலதரப்பட்ட தியாகங்களை கொடுத்துள்ளனர்.
இந்த மாகாணசபை ஆட்சிமுறை 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் சொற்ப தீர்வான இந்த மாகாண சபை முறைமை வந்தது அதில் முதலாவது அம்சமாக ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது
அந்த பொது மன்னிப்பு ஒட்டுமொத்தமாக இயக்கங்களில் இருந்த அனைவருக்கும் இருந்த போதும் தற்போது கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் மக்கள், சில தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளது இந்த தடை காரணமாக இலங்கைக்கு வரவேண்டிய கனிசமான பொருளாதாரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தடைபட்டுக் கொண்டிருக்கின்றது
புலம்பெயர் தேசத்தில் பல பேர் பல கோடி ரூபா பெறுமதியான முதலீடுகளை வைத்துக் கொண்டுள்ளனர். இந்த பணம் இலங்கைக்கு வருமாக இருந்தால் நாடு அபிவிருத்தியடையும், அதுமட்டுமல்ல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கிலுள்ள நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தியடையும். எனவே இலங்கை அரசும் இந்தியா அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயமாகும்
எனவே புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தடை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள சரத்தின்படி பொதுமன்னிப்பு வழங்கியே ஆக வேண்டும் இது தொடர்பாக இந்திய அரசும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் இந்தியா பாராமுகமாக இருக்க முடியாது இந்த ஓப்பந்தம் காலாவதியாக வில்லை ஆகவே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் இதனை தற்போதைய ஜனாதிபதி அரசால் ஏற்படுத்த முடியும் ஏன் என்றால் இந்த அரசு ஒரு போராட்ட அமைப்பை கொண்டதுடன் இன மத பேதமற்றது என்பதுடன் தொடர்ந்து 20 வருட கால ஆட்சியை நிலைநிறுத்த கூடிய தேற்றம் வல்லமையுள்ள இந்த அரசு இருக்கிறது.
எனவே புலம்பெயர் தேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் தமிழ் உறவுகளின் தடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக இந்திய இலங்கை அரசு மற்றும் ஜ.நா.சபைக்கு மகஜர் வழங்கவுள்ளேன் என அவர் தெரிவித்தார்.





