• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கிழக்கு மாகாண வரலாற்றில் புதிய மைல்கல்: சம்மாந்துறையில் 530 பேருக்கு இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை!

கிழக்கு மாகாண வரலாற்றில் புதிய மைல்கல்: சம்மாந்துறையில் 530 பேருக்கு இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை!

கிழக்கு மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய இலவசக் கண்புரை (Cataract) அறுவைச் சிகிச்சை முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி (College of Ophthalmologists of Sri Lanka) மற்றும் ‘HelpAge Sri Lanka’ ஆகிய நிறுவனங்களின் பூரண ஒத்துழைப்புடன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் சீரிய ஒருங்கிணைப்பில் இம்மாபெரும் மனிதநேய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 530-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவசமாகக் கண்புரை அறுவைச் சிகிச்சைகளைப் பெற்று, மீண்டும் தெளிவான பார்வையைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இம்முகாமில், இதுவரை 90 நோயாளிகளுக்கான அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான நலிவுற்ற மக்களின் வாழ்க்கையில் வெளிச்சமேற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவ முகாமினைச் சாத்தியமாக்கிய கண் மருத்துவ நிபுணர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், தாதியர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள், HelpAge Sri Lanka பிரதிநிதிகள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share the Post: