கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ (Gemini) செயற்கை நுண்ணறிவு மாதிரி, தனது பாதுகாப்புத் திறனை ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்ட சோதனையின் போது, தன்னிச்சையாக இணையத்தைப் பயன்படுத்தி பிற நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் ஊடுருவிய சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுளின் AI அமைப்பு ஒன்று சுயாதீனமாக இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அறியப்படும் முதல் சம்பவம் இதுவாகும்.
கடந்த மே மாதம் ‘இர்ரெகுலர்’ (Irregular) என்ற சுயாதீன பாதுகாப்பு மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய சோதனையின் போதே இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இணையத்தில் கிடைத்த தகவல்கள், யூகித்த கடவுச்சொற்கள் மற்றும் பொதுவளத் தரவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தனது சோதனை எல்லைக்கு உட்பட்டவை எனத் தவறாகக் கருதி மூன்று வலைத்தளங்களை ஜெமினி அணுகியுள்ளது. எனினும், சிறிது நேரத்திலேயே அந்தச் செயல்பாட்டை அது தாமாகவே நிறுத்திக்கொண்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சோதனை முறைகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு பொறியியல் துணைத் தலைவர் ஹீதர் அட்கின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பொறுப்பான பயிற்சிகளை வழங்குவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோன்று மெட்டா, அனத்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ ஆகிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சோதனைகளின் போதும் சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவுகள் அதிக தன்னாட்சியுடன் (Autonomous) இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அவற்றுக்குக் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது.




