சட்டத்தை மீறினால் 14 நாட்கள் விளக்கமறியல் வரை தண்டனை கிடைக்கும் எனச் சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பிரதேசத்தில் பொது வீதியோரங்களில் சுகாதார சீர்கேடான முறையில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை இலக்காகக் கொண்டு சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஒருங்கிணைப்பில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHII), பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இக் கூட்டுச் சோதனையை மேற்கொண்டனர்.
இச் சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் வீதியோரங்களில் மீன் விற்பனையில் ஈடுபட்ட 12 வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாய் பிணைத் தொகையில் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான வழக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி கௌரவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பொது வீதிகளில் மீன் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான சட்ட விதிமுறைகளை வியாபாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், இவ்வாறான சட்டவிரோத விற்பனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட நபர்கள் 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சுகாதாரமான மற்றும் ஒழுங்குமுறையான வர்த்தகச் சூழலை உருவாக்குவதற்கு அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.






