• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹினா ஸ்ரீலங்கா” (SIHINA SRI LANKA) வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் – 

மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹினா ஸ்ரீலங்கா” (SIHINA SRI LANKA) வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் – 

ஹஸ்பர் ஏ எச் 

தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட 

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சிஹினா ஸ்ரீலங்கா” (Sihina Sri Lanka) திட்டம், வேலைவாய்ப்பு ஆதரவு அலகுகளை நிறுவுவதன் மூலம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்ட நிகழ்வு இன்று (16) தம்பலாகாமம் பிரதேச செயலக பிரிவின் புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்றன.

இத்திட்டம் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக பிரதேச செயலக உளவளத்துனை உத்தியோகத்தர் திருமதி கொன்சலின் மாவலன் கலந்து சிறப்பித்துடன் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய முதலாளிகளுடன் இணைத்தல், அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துதல், உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், அத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குதல் ஆகியன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

 இந்நிகழ்வின்போது, பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அவர்கள் பின்பற்ற வேண்டிய உத்திகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்போது முதலாளிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் பங்கேற்பாளர்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அத்துடன், தன்னம்பிக்கை, குழு ஒத்துழைப்பு மற்றும் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு செயற்பாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும், தம்பலாகாமம் பிரதேச செயலகப் பிரிவில் அவர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் இந்நிகழ்ச்சித் திட்டம் முக்கிய பங்காற்றியது. மேலும், நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரிடமிருந்தும் இத்திட்டத்திற்கு சாதகமான வரவேற்பு கிடைத்தது.

இதில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளின் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

—

Share the Post: