• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அறிவியல் ஆய்வுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அறிவியல் ஆய்வுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

vadivel shagthivel

யாழ்ப்பாணத்தின் முக்கிய இயற்கை வளமான நிலத்தடி நீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதனைப் பாதுகாத்து விஞ்ஞான ரீதியாக முகாமைத்துவம் செய்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாத்து, அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 190 மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (16) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில், யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள இலங்கை நீர்வளச் சபைக்குச் சொந்தமான காணியில், இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகொடி, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை நீர்வளச் சபையின் அதிகாரிகள் மற்றும் துறைசார் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபாடு தொடர்பாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. கடந்த காலங்களில் சுண்ணாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நிலத்தடி நீர் வளத்தைப் பாதிக்கும் ஏனைய காரணிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளன.

முறையான கழிவுநீர் முகாமைத்துவம் இன்றி அமைக்கப்படும் மலசலகூடக் குழிகளிலிருந்து கழிவுநீர் கசிந்து நிலத்தடி நீரில் கலப்பதால், நீர் வளம் மாசடையும் அபாயம் காணப்படுகின்றது. குறிப்பாக, சுண்ணாம்புக்கற்பாறைகள் நிறைந்த யாழ்ப்பாணத்தின் நிலவியல் அமைப்பு காரணமாக, ஒரு பகுதியில் ஏற்படும் மாசுபாடு நிலத்தடி நீரின் தரத்தைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

மேலும், காலநிலை மாற்றங்களால் நிலத்தடி நீர் வளம் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற்கொண்டு, அறிவியல் ஆய்வுகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதுடன், மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். எனவே, கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிலத்தடி நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Share the Post: