மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கான ‘’மனோஹரி மொடியூல்’’ பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, உதவி மாவட்டச் செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (16.10.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது.
மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (Center for Human Rights and Development – CHRD) அனுசரணையில் இப்பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டது.
அரச சேவையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு இடையே பணிச்சூழல் அழுத்தங்களைக் குறைத்தல், நிருவாகத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களுடனான தொடர்புகளைச் சீரமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன்போது மற்றவர்களின் உணர்ச்சிகளைச் சரியாக இனங்கண்டு அதற்குப் பொருத்தமாகப் பதிலளிப்பது எவ்வாறு மற்றும் மனித நடத்தைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அவதானித்து கையாளும் முறைகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இப்பயிற்சி நெறியில் சிரேஷ்ட மனநல வைத்திய நிபுணரும், ‘மனோஹரி மொடியூல்’ திட்டத்தின் ஸ்தாபகருமான வைத்தியர் எம்.கணேசன் வளவாளராகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழிநடத்தினார்.
மனித மனவெழுச்சிகள், மன அழுத்தம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்திச் சரியாகக் கையாளும் வழிமுறைகள் தொடர்பாக, பங்கேற்பாளர்களின் நேரடிப் பங்களிப்பு மற்றும் அனுபவப் பகிர்வுகள் ஊடாகச் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேலும், சமூக மட்டத்தில் அன்றாடம் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளை உதாரணங்களாகக் கொண்டு அனுபவ ரீதியான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், மற்றும் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் திட்ட முகாமையாளர் திருமதி.புஷ்பராணி பிகராடோ, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையமானது, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களுக்கான ‘மனோஹரி மொடியூல்’ பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இத்திட்டம் எதிர்வரும் காலங்களில் ஏனைய திணைக்கள அதிகாரிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






