(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பெரிய்பாவான 43 வயதுடைய கந்தசாமி கமலேஸ்வரன் அல்லது கமல் என்பவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை (2026-10-9) தீர்ப்பளித்தார்
குறித்த பிரதேசம் ஒன்றில் கடந்த 2020ம் ஆண்டு பெப்பிரவரி 23 ம் திகதி சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியை கவர்ந்து கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சிறுமியின் பெரியப்பாவை கைது செய்து நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி..தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடிய நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் கடந்த மாதம் செப்டம்பர் 18ம் திகதி (2026-9-18) இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை (2026-10-9) அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் குறித்த நபரின் முதலாவது குற்றமான சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியை கவர்ந்து கொண்டு சென்ற குற்றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும். இரண்டாவது குற்றமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சாதாரண சிறையும் இந்த இரு குற்றத்திற்கான கடூழிய சிறைத்தண்டனை ஒன்றின் பின் ஒன்றாக 20 வருடம் செயல்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.




