• Home
  • உள்ளூர் செய்திகள்
  • தளவாய் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் உறுதி!

தளவாய் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் உறுதி!

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கலந்துரையாடும் விசேட மக்கள் சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) அன்று நடைபெற்றது.

ஏறாவூர்பற்று நகரசபை உறுப்பினர் சு.ரகுபரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் கே.நாகேந்திரனின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இச்சந்திப்பின் போது, தளவாய் கிராம மக்கள் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் தங்களது கிராமத்து வீதிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அத்துடன், அன்றாடம் தாம் எதிர்கொள்ளும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் ஆதங்கங்களையும் அவரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

மக்களின் கருத்துக்களையும், அவசரத் தேவைகளையும் பொறுமையுடன் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத்,இக்கிராமத்தின் தேவைகளை அடுத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகவும் அத்தியாவசியத் தேவைகளாக முன்னிலைப்படுத்தி, அவற்றுக்கான உரிய தீர்வுகளை விரைவாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.”என மக்களிடம் உறுதியளித்தார்.மேலும், இச்சந்திப்பின் போது கிராம மக்களின் மேலதிக தேவைகள், அப்பகுதி பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத்தில் அவசரமாகச் செப்பனிடப்பட வேண்டிய வீதிகள் குறித்தும் மக்களுடன் அவர் விரிவாகக் கலந்துரையாடி தகவல்களைச் சேகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: