கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் தாத்தா செலுத்திய வாகனத்தின் சில்லில் நசியுண்டு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்த துயரச் சம்பவம் (05) காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக (Double Cab) ரக வாகனத்தைக் குழந்தையின் தாத்தா இயக்கத் தொடங்கியபோது, எதிர்பாராத விதமாகக் குழந்தை திடீரென வாகனத்தை நோக்கி ஓடிச் சென்றுள்ளது. இதன்போது வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுக் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவத்தையடுத்து குழந்தையின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். இச்சோகச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





