• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வாழைக்குலைக்கு ரசாயன மருந்து தெளித்தவருக்கு 6 மாத சிறை: யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிச் சம்பவம்!

வாழைக்குலைக்கு ரசாயன மருந்து தெளித்தவருக்கு 6 மாத சிறை: யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிச் சம்பவம்!

யாழ்ப்பாணம்: யாழ். நீர்வேலி பகுதியில் அன்னதானத்திற்காக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 424 கிலோகிராம் எடையுள்ள வாழைக்குலைகளுக்கு, செயற்கையாக பழுக்க வைப்பதற்காக அபாயகரமான ரசாயன மருந்தை தெளித்து விற்பனை செய்ய முயன்ற நபருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீர்வேலிப் பகுதியில் பெருமளவு வாழைக்குலைகளுக்கு ரசாயனம் தெளிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) திடீர் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது, மனித உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் தெளிக்கப்பட்ட நிலையில் இருந்த 424 கிலோ வாழைக்குலைகள் கைப்பற்றப்பட்டு, விற்பனை முயற்சி முறியடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கு விசாரணையை அடுத்து, அவருக்கு 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உணவுகளில் ரசாயனம் கலப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

Share the Post: