கிழக்கு மாகாணத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசியக் கல்லூரியின் பிரம்மாண்டமான “MIKE WALK 2026” விழிப்புணர்வு நடைபவணி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பழைய மாணவர் சங்கம், கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர் பாராளுமன்றம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவணி, மட்டக்களப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பாடசாலையின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி நலன்களை முன்னிறுத்தி இந்த நடைபவணி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
வண்ணமயமான ஊர்வலங்கள், இசைக்குழுக்களின் முழக்கங்கள் மற்றும் கல்லூரி கொடிகளுடன் வீதிகளை அலங்கரித்தவாறு சென்ற “MIKE WALK 2026”, மட்டக்களப்பு நகரையே விழாக்கோலம் பூணச் செய்தது.









