• Home
  • உள்ளூர் செய்திகள்
  • வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

வழக்கு விசாரணைக்கு தொடர்ச்சியாக முன்னிலையாகாமல் இருந்துவரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

மாத்தறை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, பசில் ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது. இதனை அமல்படுத்த சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியைப் பெற்று, அமெரிக்க நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைக் கோரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு சந்தேகநபர் எந்த நாட்டில் வசித்தாலும் அல்லது அந்நாட்டின் பிரஜையாகவே இருந்தாலும், அவரை இலங்கைக்கு அழைத்து வர வேண்டுமெனில் அந்நாட்டின் நீதிமன்ற உதவியைப் பெறுவது அவசியமான சட்ட நடைமுறையாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பசில் ராஜபக்ச தீவிர நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், அதனால் அவரால் நீண்ட விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் வாதிட்டு வருகின்றனர். எனினும், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி பல சந்தர்ப்பங்களில் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: