இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலை வளாகத்திற்குள் இன்று (7) காலை மீண்டும் கடும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (6) இரவு குறித்த சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்ற நிலைமை தற்காலிகமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், இன்று காலையில் கைதிகள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கலவரத்தின் போது, சிறைச்சாலை வளாகத்திலுள்ள வைத்தியசாலைக் கட்டிடத்திற்கும் கைதிகள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் தீவிரமடைந்துள்ள இந்த மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், கைதிகளைக் கலைப்பதற்கும் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சிறைச்சாலையைச் சுற்றி கூடுதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.




