“மனித நேயத்திற்காக அர்ப்பணித்த உயிர்களை என்றும் மறவோம்; அவர்களின் தியாகம் எம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்” எனும் தொனிப்பொருளில், படுகொலை செய்யப்பட்ட பட்டிணிக்கு எதிரான சர்வதேச அமைப்பின் (Action Against Hunger – ACF) 17 மனிதாபிமானப் பணியாளர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பொது அமைப்புக்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் உறவினர்களின் ஒருங்கிணைப்பில், இன்று (08.08.2026) திருகோணமலை, மூதூர் கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்பாட்டாளர்களின் விசேட அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களின் உருவப்படங்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, சுடரேற்றி அகவணக்கத்துடன் பாசறை அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நினைவுரைகளின் போது முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:
- படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமானப் பணியாளர்களுக்காக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- குற்றவாளிகள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
- எதிர்காலத்தில் மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நட்டஈடும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
இந்நினைவேந்தல் நிகழ்வில் இந்து சமயக் குருமார்கள், கத்தோலிக்க ஆயர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், கா.நாகேந்திரன், வேலன் சுவாமிகள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.








