நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் (PPA) ஏற்பாட்டில், பாடசாலை வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் “PPA Assembly & Walk – MATHEENIAN MIZANA” நிகழ்வு நேற்று (30) சனிக்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது.
நிந்தவூர் மண்ணை உலுக்கிய இந்த எழுச்சிப் பேரணியில், பாடசாலையின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பழைய மாணவர்கள், தற்போதைய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
பழைய மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதுடன், பாடசாலையின் எதிர்காலப் பின்னடைவுகளைக் களைந்து அதன் கல்வி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதே இந்த மாபெரும் நிகழ்வின் பிரதான நோக்கமாகும். அத்துடன், சமூக மட்டத்தில் பாடசாலையின் நற்பெயரைக் கொண்டு சேர்ப்பதற்கும் இதுவொரு சிறந்த களமாக அமைந்தது.
நிகழ்வின் ஆரம்பத்தில் பழைய மாணவர்களின் விசேட ஒன்றுகூடல் (Assembly) இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து வர்ணமயமான பதாதைகள் மற்றும் பாடசாலைக் கொடிகளை ஏந்தியவாறு ‘மதீனியன் மீஸானா’ பேரெழுச்சி நடைபவணி (Walk) கோலாகலமாக வீதி உலா வந்தது.
ஊரின் முக்கிய வீதிகளினூடாகச் சென்ற இந்தப் பேரணிக்கு, பிரதேச மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.








