மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு.

தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் “தன்வந்திரி – வாசி சுவாசி” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 தமிழ் புத்தகங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழக நிர்வாகிகளின் விசேட கோரிக்கைக்கு இணங்க இப்புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு ரோட்டரிக் கழக நிர்வாகிகளிடமிருந்து முதற்கட்டமாக மிகவும் பெறுமதி வாய்ந்த சுமார் 2000 புத்தகங்கள் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையில் இப்புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு நகர் ரோட்டக் கழகத் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான வைத்தியர் கே.ஈ.கருணாகரன் தலைமையில் வியாழக்கிழமை(05.11.2026) மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.

புத்தக உதவிகள், பல்வேறு உதவித் திட்டங்கள் தமிழ்நாடு ரோட்டரிக் கழகங்கள் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களும் இதன் போது இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் ரோட்டரிக் கழகத்தின் இந்திய பிரதிநிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு பகுதி மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, மாணவர்களினதும் இளைஞர்களினதும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புத்தகத் தெர்குதியில் நாவல்கள், கவிதைகள், வரலாற்று நூல்கள், சங்க இலக்கியம் மற்றும் ஆய்வு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்பிலான நூல்கள் அடங்குகின்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மாநகர சபை உறுப்பினர்கள், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் பிரபாகரன், மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்செயன், ரோட்டரிக் கழக தமிழ்நாடு சென்னை மாவட்ட முன்னாள் ஆளுநர் என்.எஸ்.சரவணன், ரோட்டரிக் கழக தன்வந்திரி செயற்றிட்டப் பிரதானி டி.ஆர்.தனசேகர், ரோட்டரிக் கழக சிறப்பு முன்னெடுப்புக்களுக்கான பிரதானி எஸ்.சாய்சேக்ஷன், ரோட்டரி வலயம் 5 தெற்காசியா உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஜெகவண்ணன், நூலகப் பொறுப்பாளர், அலுவலகர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Share the Post: