மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு – வாகனேரி பகுதியில் போதிய நீர்வளம் இருந்தபோதிலும், பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் குடிநீர் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அண்மையில் அப்பகுதிக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டார்.
வாகனேரிக் குளத்தைப் பார்வையிட்ட அவர், மக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்ததுடன் பின்வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்:
- குறுகிய கால நடவடிக்கை: முதற்கட்டமாக அப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீரை உடனடியாக வழங்குவதற்கான உறுதியை அளித்தார்.
- நிரந்தரத் திட்டம்: நீண்டகால அடிப்படையில் நிரந்தரக் குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிராந்தியப் பொறியியலாளருடன் கலந்துரையாடி முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
ஆலய அபிவிருத்தி மற்றும் கலந்துரையாடல் தொடர்ந்து, வாகனேரி ஸ்ரீ இத்தியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கினங்க அங்கு சென்ற அவர், ஆலய அபிவிருத்திப் பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இவ்விஜயத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.கோவிந்தராஜா, ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், கா.நாகேந்திரன், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.








