(கனகராஜா சரவணன்)
வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவ நிகழ்வை முன்னிட்டு, வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு ‘மட்டு இளைஞர்கள்’ இன்று (12) புதன்கிழமை தாகசாந்திச் சேவை மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஆலயத் திருவிழா காலங்களில் தொடர்ச்சியாகச் சமூகப் பணியாற்றி வரும் இவ்விலளைஞர் குழுவினர், இவ்வாண்டும் தங்களின் உன்னத சேவையைத் தொய்வின்றி 13-வது வருடமாக வெற்றிகரமாகத் தொடர்ந்துள்ளனர்.
கடுமையான வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாது, தீர்த்தோற்சவப் பெருவிழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஆன்மீக அடியார்களுக்குக் குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் வழங்கி இளைஞர்கள் உபசரித்தனர்.
தாகசாந்தி நிகழ்வு நிறைவடைந்ததும், அப்பகுதியில் பாவிக்கப்பட்ட கடதாசி கோப்பை (Paper Cup)
மற்றும் ஏனைய கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, அவ்விடத்தைச் தூய்மைப்படுத்தும் பணியிலும் இளைஞர்கள் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பல வருடங்களாகத் தங்குதடையின்றித் தொடரும் இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பான சமூகச் சேவையையும், சுற்றுச்சூழல் மீதான அக்கறையையும், ஆன்மீகப் பொறுப்புணர்வையும் பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.








