• Home
  • உள்ளூர் செய்திகள்
  • 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் கோரப்பட்ட “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடவடிக்கை

100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் கோரப்பட்ட “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடவடிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம் –

திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு”  இன்று (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குமார் ஜெயக்குமார் பவுண்டேசனின் தலைவர் குமார் ஜெயக்குமாரனின் சுமார் 19இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

இந்த தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு நீண்டகால கோரிக்கையாகும். பல ஆண்டுகளாக இந்த தேவையை மக்கள் வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை இதனை முழுமையான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நீண்டகால பொதுமக்களின் எதிர்பார்ப்பை கருத்திற்கொண்டு, திரு. குமார் ஜெயக்குமரன், MBA, BSc (Hons), மற்றும் அவரது குழுவினர் தாமாக முன்வந்து, இந்த முக்கியமான பணியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

“இது ஒரு தனிப்பட்ட முயற்சி அல்ல – மக்களுக்கான ஒரு சேவை”

இதுகுறித்து கருத்து தெரிவித்த திரு. குமார் ஜெயக்குமரன் அவர்கள்,

“கங்கை தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களும் பக்தர்களும் இதற்காக எதிர்பார்த்து வந்துள்ளனர். இந்த நீண்டகால தேவையை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய பங்களிப்பையாவது நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நானும் எனது குழுவினரும் முன்வந்துள்ளோம்.”

என்றார்.

மேலும் அவர்,

“இந்தப் பணியின் நோக்கம் எந்தவொரு தனிநபருக்கும் புகழ் தேடுவதோ, அரசியல் அல்லது வேறு எந்த தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்ல. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதும், பக்தர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்துவதும், ஆலயத்தின் புனிதத்தன்மை மற்றும் சிறப்பை மேலும் மேம்படுத்துவதுமே எங்களுடைய நோக்கமாகும்.”

எனத் தெரிவித்தார்.

பக்தர்களின் நலனும் ஆலயத்தின் மேம்பாடும் முக்கிய நோக்கம்

கங்கை தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட்டதன் மூலம், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தீர்த்தம் தொடர்பான ஆன்மிகச் சடங்குகளை பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளும் வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஆலயத்தின் நீண்டகால தேவைகளில் ஒன்றாக இருந்த இந்த வசதி ஏற்படுத்தப்படுவதன் மூலம், பொதுமக்களின் பயன்பாடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் ஆலயத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவற்றுக்கும் பயனுள்ளதாக அமையும்.

“ஆலயம் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ சொந்தமானது அல்ல. அது மக்களின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு அடையாளத்துடன் தொடர்புடைய ஒரு புனிதத் தலம். எனவே, ஆலயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும்” எனவும் குமார் ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக நிறைவேறாத கோரிக்கைக்கு புதிய தொடக்கம்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்த இந்த கோரிக்கைக்கு தற்போது ஒரு நடைமுறைத் தொடக்கம் கிடைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.

இதனை ஒரு ஆரம்ப கட்டமாகக் கொண்டு, பக்தர்கள், பொதுமக்கள், ஆலய நிர்வாகம், சமூக அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரினதும் ஒத்துழைப்புடன், தேவையான முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்து, திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள குமார் ஜெயக்குமரன், “மக்களுக்காக தொடங்கப்படும் நல்ல பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்; நாம் செய்யக்கூடியதை இன்று தொடங்கினால், அது எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Share the Post: