பொலன்னறுவை, பகமூண – தம்புள்ளை வீதியின் தமனயாய பகுதியில் (11) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தாயும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயதுக் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.
இன்று அதிகாலை 1.25 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி அதிவேகமாகப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து, தமனயாய பகுதியில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திரும்ப முயன்றபோது அதன் மீது பலமாக மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் பகமூண, தமனயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனுமே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த ஒன்றரை வயதுக் குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அதிவேகக் கட்டுப்பாடற்ற சேவையே விபத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி பொதுமக்கள், அந்தப் பேருந்தினால் முன்னரும் பலர் நூலிழையில் உயிர் தப்பியதாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சொகுசுப் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ள பகமூண பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




