ஹஸ்பர் ஏ எச்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களே,
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு அவர்களே,
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க அவர்களே,
Adani Ports and SEZ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷ்வனி குப்தா அவர்களே,
John Keells Holdings நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கிரிஷன் பலேந்திரா அவர்களே,
கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முனிஷ் கன்வர் அவர்களே,
மதிப்பிற்குரிய விருந்தினர்களே, கடல்சார் துறையைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களே, பெண்களே, ஆண்களே,
இன்று இங்கு இருப்பது எனக்கு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
உயர்ஸ்தானிகராக நான் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளேன். சில நிகழ்வுகளில் நாடா வெட்டும் நிகழ்வுகள் இடம்பெறும். சிலவற்றில் விளக்கேற்றும் நிகழ்வுகள் இடம்பெறும். ஆனால், இரண்டு மில்லியன் கொள்கலன்களை கொண்டாடும் நிகழ்வு மிகவும் அரிதானது. இன்று அத்தகைய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்!
எளிமையாகக் கூறுவதானால், சிறப்பான செயல்திறனின் ஒரு முக்கிய மைல்கல்லைக் கொண்டாடுவதற்காகவே நாம் இன்று இங்கு கூடியுள்ளோம்.
இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு மில்லியன் TEU என்ற இலக்கு கடந்துசெல்லப்பட்டுள்ளது. அதுவும் சாதனைக்குரிய குறுகிய காலத்தில் இது எட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் என்றால் என்ன என்பதை நாம் நினைவுகூர்வோம்.
இது ஒரு முன்னணி ஆழ்கடல் கொள்கலன் முனையமாகும். இலங்கை துறைமுக அதிகார சபை, John Keells Holdings மற்றும் Adani Ports and SEZ ஆகியவற்றின் கூட்டாண்மையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 750 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் கடல்சார் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான உட்கட்டமைப்பு முதலீடுகளில் ஒன்றாகும்.
ஆனால், எண்கள் இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே.
இந்த முனையம் இந்தியா–இலங்கை பொருளாதார ஒத்துழைப்பின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இலங்கையின் நிபுணத்துவம். இந்தியாவின் நிபுணத்துவம். இலங்கை மூலதனம். இந்திய மூலதனம். இவை அனைத்தும் ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்துள்ளன.
இந்த மூன்று பங்காளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
இத்தகைய ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு தொலைநோக்குப் பார்வை தேவை. அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உண்மையான அர்ப்பணிப்பு தேவை. நீங்கள் இரண்டையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
உலகமும் இதனை கவனித்துள்ளது.
முக்கியமான சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் இங்கு தங்களது நம்பிக்கையை வைத்துள்ளன.
கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் உணர்வுகளின் அடிப்படையில் முடிவெடுப்பவை அல்ல. அவை செயல்திறன் இருக்கும் இடத்திற்கே செல்கின்றன.
அவை கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்திற்கு வருகின்றன. இது அனைத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
சாதனைக்குரிய குறுகிய காலத்தில் இரண்டு மில்லியன் TEU கையாளப்பட்டிருப்பது அதிர்ஷ்டம் அல்ல. அது சிறப்பான செயல்திறனின் விளைவு.
அதனுடன் தொழில்நுட்பமும் இணைந்துள்ளது.
தானியங்கி கிரேன்கள். மின்சார முனைய வாகனங்கள். பின்னணியில் அமைதியாக இயங்கும் நவீன ஸ்மார்ட் தொழில்நுட்ப அமைப்புகள்.
மேலும், 20 மீற்றர் ஆழம் கொண்ட ஆழ்கடல் நீர்வழி வசதி, புதிய தலைமுறை மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை கையாளுவதற்குத் தயாராக உள்ளது.
இதனால் CWIT பிராந்தியத்தின் மிகச் சிறந்த முனையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதையும் தாண்டி சிறப்பானதாக உள்ளது என்று நான் கூறுவேன்.
ஆனால், இதன் உண்மையான இயக்க சக்தி மனிதர்களே.
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அறிவு பகிரப்பட்டுள்ளது.
குறிப்பாக, CWIT பணியாளர்களில் பல திறமையான பெண்கள் இருப்பதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் உயர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தச் செயற்பாட்டின் மையத்தில் பணியாற்றுகின்றனர்.
இதுவே துறைமுகங்களின் எதிர்காலம். அந்த எதிர்காலம் பிரகாசமானதாகும்.
CWIT தனித்து இயங்குவதில்லை.
இது இலங்கையின் பரந்தளவிலான தளவாட மற்றும் போக்குவரத்து கட்டமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது.
லொறிப் போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், சரக்கு அனுப்புதல் மற்றும் பல்வேறு சேவைகள் என பல துறைகள் இதனுடன் இணைந்துள்ளன.
ஒரு முனையம் வளர்ச்சியடையும் போது, அதைச் சுற்றியுள்ள முழுப் பொருளாதாரமும் வளர்ச்சியடைகிறது.
நண்பர்களே,
இன்றைய உலகம் பல்வேறு விடயங்களில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது.
சுங்க வரிகள் தொடர்பாகவும், விநியோகச் சங்கிலிகள் தொடர்பாகவும், யார் முதலில் முன்னேறுவது என்பது தொடர்பாகவும் போட்டி நிலவுகிறது.
இத்தகைய காலகட்டத்தில் ஒத்துழைப்பு என்பது அரிதான ஒன்றாகும்.
அதனால்தான் இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இரு அண்டை நாடுகள் ஒன்றிணைந்து கட்டியெழுப்பத் தீர்மானித்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை இந்தத் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா தொடர்பாகவும் ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன்.
நாம் தற்போது வேகமான பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
முதலீடு கிட்டத்தட்ட 12 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகளவில் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு சவால்கள் காணப்படும் நிலையில், இது வலுவான வளர்ச்சியாகும்.
வளர்ச்சி என்றால் சரக்குகளின் அளவும் அதிகரிக்கும்.
அதிக உற்பத்தி. அதிக ஏற்றுமதி. அதிக இறக்குமதி. அதிக கொள்கலன்கள்.
இதுவே என்னை மீண்டும் கொழும்பிற்கு அழைத்து வருகிறது.
இந்தியாவும் இலங்கையும் ஏற்கனவே கடல் வழியாக ஒன்றோடொன்று இணைந்துள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் ஊடாகச் செல்லும் சரக்குகளில் கணிசமான பகுதி இந்தியாவுடன் தொடர்புடையதாகும்.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் நிலையில், இந்தத் தொடர்பும் மேலும் வலுப்பெறும்.
இந்தியாவின் துறைமுகங்கள், முதலீட்டாளர்கள், தளவாட நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட இந்தியாவின் பரந்த பொருளாதாரச் சூழலுடனான கொழும்பு துறைமுகத்தின் கூட்டாண்மைகள் குறிப்பாக இந்தப் பயணத்தில் முக்கிய பங்காளியாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.
இரண்டு மில்லியன் TEU என்பது பெருமைக்குரிய ஒரு மைல்கல்.
ஆனால், நான் இதனை இறுதிக் கோடாகப் பார்க்கவில்லை. இது பயணத்தின் ஒரு முக்கிய அடையாளம் மட்டுமே.
இன்னும் நீண்ட பாதை எம்முன் உள்ளது.
அந்தப் பாதையில் நாம் ஒன்றாகப் பயணிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை அரசாங்கத்திற்கும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், John Keells Holdings நிறுவனத்திற்கும், Adani Ports நிறுவனத்திற்கும், அத்துடன் CWIT இன் முழுமையான குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.







