ஹஸ்பர் ஏ எச்
இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட 28 சிறுபான்மை இளைஞர்கள், 2026 செப்டம்பர் 21 முதல் 25ஆம் திகதி வரை நொய்டாவில் அமைந்துள்ள தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் (NIESBUD) நடைபெற்ற “அமைப்பின் வளர்ச்சி மற்றும் சிறப்புக்கான புதுமையான தலைமைத்துவம்” (ILOGE) என்ற தலைப்பிலான ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
NIESBUD என்பது இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமாகும். தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பயிற்சி, ஆலோசனை, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

2. இந்தப் பயிற்சி நிகழ்ச்சி, பங்கேற்பாளர்கள் தங்களது தலைமைத்துவத் திறன்களை வலுப்படுத்திக் கொள்வதற்கும், நவீன தலைமைத்துவ அணுகுமுறைகள், நிறுவன வளர்ச்சி மற்றும் சமூக ஈடுபாடு தொடர்பான நடைமுறை அறிவைப் பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்கியது.
பயிற்சி அமர்வுகளில் புதுமையான தலைமைத்துவம், தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாடு, சுய தலைமைத்துவம், வடிவமைப்பு சிந்தனை (Design Thinking), தலைமைத்துவ பாணிகள், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (Coaching & Mentoring), உணர்ச்சி நுண்ணறிவு, காலநிலைத் தலைமைத்துவம் மற்றும் சமூகங்களின் மீள்திறன் (Community Resilience) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றன.
மேலும், பயிற்சியின் மூலம் பெற்ற அறிவு மற்றும் திறன்களை தங்களது நிறுவனங்கள் மற்றும் சமூகங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அடையாளம் காணும் வகையில், பங்கேற்பாளர்கள் “Back Home Action Plans” (தாயகம் திரும்பிய பின்னர் செயற்படுத்தும் செயல்திட்டங்கள்) தயாரிக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.
3. பயிற்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் ஆக்ராவுக்கான கலாசாரப் பரிமாற்றக் கல்விச் சுற்றுப்பயணத்திலும் பங்கேற்றனர். இதன்போது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட்டனர்.
இந்தப் பயணம், இந்தியாவின் செழுமையான கலாசார பாரம்பரியத்தை நேரடியாக அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கியதுடன், பங்கேற்பாளர்களிடையே முறைசாரா கலந்துரையாடல்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான கற்றல் மற்றும் புரிந்துணர்வையும் மேம்படுத்தியது.
4. இலங்கை தொழில்முறை நிபுணர்கள் மற்றும் இளைஞர்களிடையே திறன் மேம்பாடு மற்றும் ஆற்றல் வளர்ப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பயிற்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
2025 ஏப்ரல் மாதம் இலங்கைக்கான அரசுமுறைப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த, இலங்கை தொழில்முறை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.





