ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசத்தில் உள்ள 16 பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது
ஜெயக்குமரன்ஸ் குளோபல் பவுண்டேசன் (Jeyakumaran’s Global Foundation )ஏற்பாட்டில், தி.மூ. சிவானந்த கனிஷ்ட வித்தியாலயம், ஈச்சிலம்பற்று வளாகத்தில், திருகோணமலை மாவட்டத்தின் 16 பாடசாலைகளைச் சேர்ந்த 150 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களின் பங்கேற்புடன் இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று (28)வெற்றிகரமாக நடைபெற்றது.
காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் வளவாளர்கள் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடவிளக்கங்கள், வினாத்தாள் அணுகுமுறைகள், நேர முகாமைத்துவம், கற்றல் உத்திகள் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஊக்கவுரை ஆகியவற்றை வழங்கினர்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் தரமான கல்வி வழிகாட்டலைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்களும் பெற்றோர்களும் இந்த முயற்சியை பெரிதும் பாராட்டியதுடன், இத்தகைய கல்வி நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினர். இதன் போது மாணவர்களுக்கான இலவச கற்றல் நடவடிக்கைகளுக்கான வினா, விடை தொகுப்புக்கள் அடங்கிய வழிகாட்டி கையேடும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வின் போது உரையாற்றிய Jeyakumaran’s Global Foundation தலைவர் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் திரு. குமார் ஜெயக்குமரன் MBA, BSc (Hons) அவர்கள் தெரிவித்ததாவது:
“ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம் அதன் பிள்ளைகளின் கல்வியே. ஒவ்வொரு மாணவரும் தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். பொருளாதார நிலை எந்தக் குழந்தையின் கனவுகளுக்கும் தடையாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் நம்பிக்கை. அதனை அடிப்படையாகக் கொண்டு, Jeyakumaran’s Global Foundation எதிர்காலத்திலும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் இதுபோன்ற இலவச புலமைப்பரிசில் வழிகாட்டல் வகுப்புகள், மாணவர் ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சிகள், இளைஞர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சமூக நலச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும். கல்வியின் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதே எங்களது நோக்கமாகும்.”
இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய தி.மு. சிவானந்த கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், வளவாளர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் Jeyakumaran’s Global Foundation தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
“இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்களின் கல்வியில் முதலீடு செய்வதே எமது சமூகத்தின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்.”







