• Home
  • உள்ளூர் செய்திகள்
  • 1 பில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: கொழும்பில் 4 பிரபல தனியார் வங்கி முகாமையாளர்கள் அதிரடிப்படைக் கைது!

1 பில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: கொழும்பில் 4 பிரபல தனியார் வங்கி முகாமையாளர்கள் அதிரடிப்படைக் கைது!

கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்றின் ஊடாகச் சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், இலங்கையின் பிரதான 4 தனியார் வர்த்தக வங்கிகளின் 4 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போதே, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்குள்ளேயே வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இவ்வளவு பாரிய தொகையிலான வெளிநாட்டு நாணயம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சட்டவிரோத நடவடிக்கைகளைச் தடையின்றி முன்னெடுப்பதற்காக, மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபரால் குறித்த வங்கி முகாமையாளர்களுக்கு வாராந்தம் அடிப்படையில் பெருந்தொகை லஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் வங்கி முகாமையாளர்கள் இவ்வாறான பாரிய நிதி மோசடி தொடர்பில் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post: