இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகரவை நேற்று (15.09.2026) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பின் போது, மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறை அபிவிருத்தி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளிகள் விடுதியை இணைக்கும் கூரை அமைப்பு பணிகள், தளவாய் மீள்குடியேற்றக் கிராமம் – களுவன்கேணி வரையான வீதி அபிவிருத்தி, சிறு குளங்கள் புனரமைப்பு, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், கோறளைப்பற்று வடக்கு வாகரை தோணிதாண்டமடு கிராம மக்கள் எதிர்கொள்ளும் வனஜீவராசிகள் திணைக்கள எல்லை விவகாரம், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய துவிச்சக்கர வண்டி தரிப்பிடம், கல்குடா நாமகள் வித்தியாலய வள அபிவிருத்தி மற்றும் தன்னாமுனை சென். ஜோசப் கல்லூரியின் கட்டமைப்பு மேம்பாடுகள், பிரதேச சபைகளுக்கான வாகனக் கொள்வனவு அனுமதி, முன்பள்ளிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இக் கோரிக்கைகள் அடங்கிய உத்தியோகபூர்வ கடிதங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டன.
முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்.







