ஹஸ்பர் ஏ ஹலீம் –
திருகோணமலை மாவட்டத்தில் உத்தியோகத்தர்களுக்கான உளவளத்துணை மற்றும் சமூகப் பணி தொடர்பிலான பயிற்சிநெறி இன்று(17) இடம் பெற்றன.முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பயிற்சி இன்று (17) தொடக்கம் 19.08.2026 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளன. ஆரம்ப முதல் நாள் நிகழ்வினை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
குறித்த பயிற்சியில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.வளவாளர்களாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் விரிவுரையாளர்களான கௌரி வாசுதேவன்,வை.எம்.நிம்சாத் மற்றும் முதியோர்களுக்கான செயலகத்தின் இணைப்பாளர் அஸ்ரின் ஆகியோர்கள்கள் கலந்து கொண்டு திறம்பட விரிவுரைகள் மூலமான பயிற்சிகளை வழங்கினர்.
திருகோணமலை மாவட்டத்தில் சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களுக்காக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பயிற்சியின் போது சமூகப் பணியின் முக்கியத்துவம், சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் காணுதல், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உளவளத்துணை வழங்குதல், ஆலோசனை வழங்கும் முறைகள் மற்றும் தொழில்சார் அணுகுமுறைகள் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், உளவியல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுடன் எவ்வாறு தொடர்பாடலை மேற்கொள்வது, அவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்து புரிந்துகொள்வது, தேவையான சேவைகள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்களை இணைப்பது உள்ளிட்ட நடைமுறை விடயங்களும் பயிற்சியில் இடம்பெற்றன.
மூன்று நாட்களாக நடைபெறவுள்ள இப்பயிற்சி, சமூக சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
சமூகத்தின் நலிவுற்ற மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை வழங்குவதற்கும், அவர்களின் உளவியல் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்கும் இப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இதில் மேலும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர், சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர், முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் மாவட்ட உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.







