• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • ரியாத்தில் நடைபெற்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா: பிரதம அதிதியாக இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் பங்கேற்பு!

ரியாத்தில் நடைபெற்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா: பிரதம அதிதியாக இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் பங்கேற்பு!

சவூதி அரேபியாவின் ரியாத், பத்ஹா பகுதியில் உலக மொழிகளில் அறபு மொழியின் சிறப்பும் தனித்துவமும் என்ற தலைப்பிலான தமிழ் மொழி நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அஷ்ஷெய்க் K.M. அபுல் ஹஸன் மதனி அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேதகு O.L. அமீர் அஜ்வத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருமளவிலான புலம்பெயர் சமூகத்தினர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தூதுவர், சமகால உலகில் அறபு மொழியின் பயன்பாடு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், அறபு பேசும் நாடுகளில் வேலைவாய்ப்பைத் தேடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பேச்சுவழக்கு அறபு மொழியைக் கற்பதற்கான கருவிகளை உருவாக்கி வெளியிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் அறபு மொழி, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகவும், சர்வதேச இராஜதந்திரம் மற்றும் வர்த்தகத்திற்கான முக்கிய ஊடகமாகவும் திகழ்கின்றது. அறபு மொழியின் செழுமையான பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் திகதி சர்வதேச அறபு மொழி தினம் அனுசரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: