எரிபொருள் மானியத்திற்காக திறைசேரியிலிருந்து ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களைச் சென்றடைகிறதா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட 41 பில்லியன் ரூபா மானியத்தின் உண்மைப் பயன் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
(06.11.2026) வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்விலேயே அவர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.
சாணக்கியன் எம்.பி. முன்வைத்த முக்கிய சுட்டிக்காட்டல்கள்:
: நாட்டில் முதன்மைப் பணவீக்கம் 8.3 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதுடன், எரிபொருள் விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 29.2 பில்லியன் ரூபா தேறிய இலாபத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், அரசாங்கம் வழங்கும் 41 பில்லியன் ரூபா மானியத்தின் பலன் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2026 ஜூன் இறுதியில் திறைசேரியின் கையிருப்பு 690.3 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், எரிபொருளுக்கு மேலதிக வரிகளை அறவிடாமல் அப் பணத்தை மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். டீசலுக்கு வழங்கப்படும் 70 ரூபா நிவாரணத்தை எதிர்வரும் டிசம்பர் 31 உடன் நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் வினவினார்.
எரிபொருள் மானியங்களை வழங்கும்போது பொதுப்போக்குவரத்துத் துறை, விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். வரவிருக்கும் பெரும்போகச் செய்கையின் போது டீசல் விலை அதிகரிப்பால் விவசாயச் செலவு இருமடங்காகும் அபாயம் இருப்பதால், பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களை அடையாளம் கண்டு இலக்கு அடிப்படையில் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தார்.
இத்துடன், மட்டக்களப்பின் பிரதான பிரச்சினையான மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறும் அரசாங்கத்திடம் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.




