• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பு மாநகர சபையின் டிஜிட்டல் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்: AI மற்றும் QR Code தொழில்நுட்பங்கள் அறிமுகம்!

மட்டக்களப்பு மாநகர சபையின் டிஜிட்டல் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்: AI மற்றும் QR Code தொழில்நுட்பங்கள் அறிமுகம்!

மட்டக்களப்பு மாநகர சபையினால் பொதுமக்களுக்கான சேவைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில், நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்களுக்கான வர்த்தகக் கண்காட்சியின் போது, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையிலும், மாநகர சபை ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் வழிகாட்டலிலும், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகரவினால் இச்சேவைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

QR Code மற்றும் AI தொழில்நுட்ப வசதிகள்:

பொதுமக்களின் வசதிக்காக மாநகர சபைக்குட்பட்ட பொது இடங்களில் QR Code-கள் காட்சிப்படுத்தப்படும். பொதுமக்கள் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் இதனை ஸ்கேன் செய்து தகவல்களைப் பெறுவதோடு, கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியும்.

சிறப்பு அம்சமாக, வழங்கப்பட்டுள்ள பச்சை நிற QR Code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் ஊடாக உடனடியாக பதில்களும் வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள்:

  • வீதி அபிவிருத்தி தொடர்பான தகவல்கள் மற்றும் கோரிக்கைகள்
  • மாநகர சபை சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்தல்
  • வீதி விளக்குகள் பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் சார்ந்த சேவைகள்
  • கழிவகற்றல் மற்றும் துப்புரவு நடவடிக்கைகள்
  • ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்
  • ஏனைய பொதுமக்கள் சேவைகள் சார்ந்த தகவல்கள்

“பொதுமக்களின் சேவை – நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலகுவான சேவை” எனும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், பொதுமக்கள் நேரில் வருகை தருவதைக் குறைத்து, சேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் பெற வழிவகுத்துள்ளது.

Share the Post: