மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கிய பராமரிப்பு அறிவியல் பீடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய ‘பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம்’ அண்மையில் வெகுவிமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 1,000 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமரக்கூடிய வகையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இம்மண்டபம், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாக விளங்கும். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மருத்துவக் கல்வி மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றிய அமரர் பேராசிரியர் T. வரகுணம் அவர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்த அரங்கம் அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். அதிநவீன ஒலி-ஒளி அமைப்புகளுடன் கட்டப்பட்டுள்ள இப் பிரமாண்ட மண்டபம், பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.










