மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ‘கிறிசலிஸ்’ (Chrysalis) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்திப்பு நேற்று (ஜூலை 02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிக்கா குணவர்த்தன தலைமையிலான இக்குழுவினருடனான சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பாதிப்புகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மூலோபாயத் திட்டங்கள், உள்ளூர் சமூகங்களின் தாங்குதிறனை (Resilience) மேம்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் அரச திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவது தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், திட்ட முகாமையாளர் கே. வினோபவன் மற்றும் பிராந்திய முகாமையாளர் யூ.எல். சம்சுதீன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மனிதநேய உதவிகள், சமூக மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் நடவடிக்கைகள் (Climate Adaptation) உள்ளிட்ட பல்வேறு நீண்டகால அபிவிருத்திசார் செயற்திட்டங்களை கிறிசலிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





