யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட பேராணை மனு மீதான விசாரணையை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
‘அபினவ நிவஹல் பெரமுன’ அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, நேற்று (ஜூலை 02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான விசேட சட்டத்தரணி அசோக் பரன், நீதிமன்றத்தில் முக்கிய சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுப்பதற்காக மிக அருகாமையிலான திகதி ஒன்றினை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இருதரப்பு விடயங்களையும் பரிசீலித்த நீதியரசர், குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.
அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில், அவர் ஒரு அரசாங்க வைத்தியராகப் பணியாற்றி வந்தார் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, அரசாங்க ஊழியர் ஒருவர் பதவியில் இருக்கும்போது நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படுவது சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகைமையை இழக்கிறார் எனவும் அந்த மனுவில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




