“இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில், வடக்கு–கிழக்கு முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு மாநாடும் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
“சமகால அரசியலும் போராளிகளின் வகிப்பாகமும்” என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு இடம்பெற்றதுடன், தமிழ்த் தேசியத்திற்குப் பங்காற்றியவர்களைக் கௌரவிக்கும் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்ததாக நடத்தப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், சந்திரநேரு, சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ‘தராகி’ சிவராம், நாட்டுப்பற்றாளர் ஐ.நடேசன், மனித உரிமை செயல்பாட்டாளர் சந்திரா பெர்னாண்டோ, அருட்தந்தையர்களான இயுனின் ஜே ஹபர், சவரிமுத்து செல்வராசா மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஊடகவியலாളர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ் சமூகத்தின் நலன் மற்றும் முன்னாள் போராளிகளின் சமகால அரசியல் பங்களிப்புகள் குறித்து விரிவான நினைவுரைகள் இடம்பெற்றன.
கலை, கலாசார, இலக்கியம் மற்றும் ஊடகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஊடாகத் தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்த்து அளப்பரிய பங்களிப்புச் செய்த படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஆளுமைகளின் அர்ப்பணிப்புகளைப் போற்றும் வகையில், அவர்களுக்கு “வரலாற்றின் வேர்கள்” எனும் மகுடம் சூட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், இந்து சமயக் குருமார்கள், கத்தோலிக்க ஆயர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், வேலன் சுவாமிகள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள், வடக்கு–கிழக்கு முன்னாள் போராளிகள் நலன்புரி சங்க உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.







