மடவலைப் பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராமிற்கும் அதிகமான தங்கம் மற்றும் ரூ. 1 கோடியே 69 இலட்சம் ரொக்கப் பணத்துடன் இரு பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்கள் வத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை (22) குறித்த விடுதியில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 8 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் 42 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள் வலப்பனை, நாவலப்பிட்டி, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை மற்றும் மோதரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
- 3 கிலோகிராம் 790 கிராம் எடையுடைய தங்கம்
- ரூபா 1 கோடியே 69 இலட்சம் ரொக்கப் பணம்
- தங்கத்தின் தரத்தைச் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் உரைகல்
- 1 லீற்றர் அசிட் திரவம்
- 2 கிரைண்டர் (Grinder) இயந்திரங்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக தீவிர விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




