மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 14வது சபை அமர்வு, சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உபதவிசாளர் தங்கராசா கயசீலன், பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

1. தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் 1 மாதத்திற்கு இடைநீக்கம்:
பிரதேச சபையின் செயல்பாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சித்துத் தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் (Facebook) பதிவிட்டு வந்தமையைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் சபை உறுப்பினரான மகாலிங்கம் மனோதினி ஒரு மாத காலத்திற்குச் சபை அமர்வுகளில் பங்கேற்காதவாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 1987ஆம் ஆண்டு பிரதேச சபை விதிகளுக்கு அமைவாக, தவிசாளரால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானத்திற்குப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இது நிறைவேற்றப்பட்டது.
2. 1990 சுவசெரிய அவசர ஆம்புலன்ஸ் சேவை கோரிக்கை:
போரதீவுப்பற்று பிரதேசம் தொடர்ச்சியாகக் காட்டுயானைத் தாக்குதல்கள், விஷப்பாம்புக் கடிகள் மற்றும் வீதி விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் அபாயகரமான பகுதியாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய உபதவிசாளர் தங்கராசா கயசீலன், மக்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக 1990 சுவசெரிய அவசர ஆம்புலன்ஸ் சேவை இப்பிரதேசத்திற்கு உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காகக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
3. குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிதி நிறுத்தம்:
பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்துப் பேசிய உபதவிசாளர்:
“கடந்த காலங்களில் வறட்சி நிலவும் போது பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க மத்திய அரசு நிதி வழங்கி வந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் அந்நிதியை நிறுத்தியுள்ளது. வருமானம் குறைந்த போரதீவுப்பற்று பிரதேச சபை, அதிகளவிலான குடிநீர் தேவைகளைத் தடையின்றி வழங்கி வருகின்ற போதிலும், கடந்த வருடத்திற்கான நிலுவைத்தொகையும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இதனைத் தங்களது அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுசென்று தீர்வு காண வேண்டும்.”
4. அபிவிருத்திப் பணிகள் & ‘டிட்வா’ புயல் பாதிப்புகள்:
- PSDG திட்டம்: PSDG திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் 80%க்கும் அதிகமான வேலைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தவிசாளர் தெரிவித்தார். எஞ்சிய வட்டாரங்களிலும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
- புயல் சீரமைப்பு: ‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக சேதமடைந்த கல்வெட்டுகள் மற்றும் வீதிகளை அடையாளம் கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சு கோரியுள்ளதால், உறுப்பினர்கள் அது தொடர்பான விபரங்களை விரைவாகச் சபை அலுவலகத்திற்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.








