பெற்றோரின் அர்ப்பணிப்புக்கும் மகளின் விடாமுயற்சிக்கும் மகுடம் சூட்டும் வகையில், காத்தான்குடியைச் சேர்ந்த இளம் கல்வியாளர் ஒருவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களால் இவருக்கான நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த யுவதி, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில், முகாமைத்துவ பீடத்தில் 4.00க்கு 4.00 (GPA 4.00 / 4.00) எனும் அதிவிசேட புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக வரலாற்றில் சாதனை படைத்திருந்தார். அத்துடன், “AL-HAJ A.L. Ibralebbe Memorial Medal for the Best Student in Management 2016/2017” என்ற சிறந்த மாணவருக்கான உயரிய விருதையும் தட்டிச்சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A பெறுபேறுகளுடன் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் 7ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இவர், நாட்டின் பல முன்னணி பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியிருந்தார். எனினும், தந்தையின் விருப்பத்திற்கும் பாதுகாப்பு குறித்த அக்கறைக்கும் மதிப்பளித்து, தனது சொந்தப் பிரதேசத்தில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தையே தனது உயர்கல்விக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின்னர், அங்கு முதற்கட்டமாக உதவி விரிவுரையாளராக சுமார் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருந்தார். எனினும், பல்கலைக்கழக சட்ட விதிமுறைகள் காரணமாக அந்தப் பதவியிலிருந்து தற்காலிகமாக விலக நேர்ந்தது. அதனை ஒரு பின்னடைவாகக் கருதாமல், தனது வணிக நிர்வாக முதுகலை (MBA) கற்கையைத் தொடர்ந்தார். தனது கடுமையான உழைப்பின் பலனாக, அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்தி, தற்போது அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளராகத் தடம் பதித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 38 வருடங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இவரது தந்தை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். “என் மகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்” என்ற மட்டற்ற பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அவர் தனது பணியில் இருந்து விடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
ஒரு மகளின் கல்வி வெற்றியாக மட்டுமன்றி, ஒரு தந்தையின் வியர்வையும், தாயின் தியாகமும் இணைந்து காத்தான்குடி மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ள இந்தச் சாதனைப் பயணம் பல இளம் மாணவர்களுக்கும் பெரும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.




