• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பில் பெரும் சோகம்: விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பில் பெரும் சோகம்: விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு, திருமலை வீதி நகரப் பகுதியில் அமைந்துள்ள “கோப் இன்” (Coop Inn) விடுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய ஆண் குழந்தையும், அவரது 5 வயதுடைய அக்காவுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமது தாயாரைப் பார்ப்பதற்காக, தந்தையுடன் இந்தச் சிறுவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளனர். இதன்போது, அவர்கள் தற்காலிகமாக திருமலை வீதியிலுள்ள குறித்த விடுதி அறையில் தங்கியிருந்துள்ளனர்.

சம்பவத்தன்று சிறுவர்களின் தந்தை, அவர்களை அறையினுள் வைத்து பூட்டிவிட்டு வெளியில் கடைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அறையிலிருந்த மெத்தை ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அச்சமடைந்த சிறுவர்கள் இருவரும், தீப்பற்றாத மற்றொரு கட்டிலுக்கு அடியில் சென்று மறைந்துள்ளனர்.

விடுதி அறையிலிருந்து கடுமையான புகை வெளியேறுவதைக் கண்ட ஊழியர்களும் அயலவர்களும் உடனடியாகச் செயற்பட்டு, அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். எனினும், கடுமையான புகை மூட்டம் காரணமாகக் கட்டிலுக்கு அடியில் சுயநினைவிழந்த நிலையில் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post: