அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தைபா பெண்கள் அரபுக் கல்லூரியில், மாணவிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய “வுழு” (Wudhu) நீர்த் தொகுதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக நலன்புரி அமைப்பான ரஹ்மத் பவுண்டேஷனின் (Rahmath Foundation) நிதி அனுசரணை மற்றும் ஏற்பாட்டில் இந்தத் திட்டம் மிக நேர்த்தியாகக் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.
கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரஹ்மத் பவுண்டேஷனின் முக்கிய பிரதிநிதிகள், உலமாக்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ரஹ்மத் பவுண்டேஷனின் பிரதிநிதிகளினால் புதிய வுழு நீர்த் தொகுதி நாடா வெட்டப்பட்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவிகள் மற்றும் ஊழியர்கள் தொழுகைக்கான தூய்மையைப் பெற்றுக் கொள்வதில் நீண்டகாலமாக இருந்து வந்த தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டே இந்த நவீன வசதிகளுடனான நீர்த் தொகுதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவிகளின் நலன்கருதியும் ரஹ்மத் பவுண்டேஷன் நிறுவனம் முன்னெடுத்து வரும் இத்தகைய உன்னதமான சமூகப் பணிகளுக்குக் கல்லூரி நிருவாகத்தினர் இதன்போது தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.



















