மனைவி தொலைபேசி அழைப்பை ஏற்காத ஆத்திரத்தில், தனது 7 மற்றும் 4 வயதுடைய இரு பிஞ்சுக் குழந்தைகளையும் கொடூரமாகத் தாக்கி காணொளி (Video) அனுப்பி மிரட்டிய பாசமற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை, பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப வறுமை காரணமாகத் தனது 7 வயது ஆண் குழந்தையையும் 4 வயது பெண் குழந்தையையும் கணவரின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டிலிருக்கும் மனைவி தனது தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறி, கோபமடைந்த கணவன் இரு குழந்தைகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
அத்துடன், குழந்தைகள் அலறித் துடிக்கும் காட்சியைத் தனது தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து, வெளிநாட்டிலிருக்கும் மனைவிக்கும் அனுப்பி வைத்துள்ளார். இக்கடூறமான காணொளியைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக இதுகுறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
தகவலறிந்த பின்னவல பொலிஸார் விரைந்து செயற்பட்டு, பாசமற்ற அந்த மிருகத்தனமான தந்தையைக் கைது செய்தனர். காயமடைந்த இரு குழந்தைகளும் மீட்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




