திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநரும் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் இன்று (15) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.
இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, யானை வேலி மற்றும் காவல் கண்காணிப்புக் கூடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இவ்வாண்டுக்குள் நிறைவு செய்யக்கூடிய திட்டங்களைத் துரிதமாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், கிராமிய வீதித் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அறிக்கைகள், காணி உபகுழு அறிக்கைகள், கடந்த கால காணிக் கச்சேரிகளின் முன்னேற்றம், காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறைகள், மணல் அகழ்வு தொடர்பான தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இக்கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டன. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





