திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான நேர்மறைக் கற்பித்தல் முறை தொடர்பான பயிற்சி நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ். றியால் அவர்களின் ஒருங்கிணைப்பில் (14) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி நிகழ்வில் வளவாளராகக் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல நிபுணர் வைத்தியர் பாத்திமா மிர்ஸா, ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உளநலத் தேவைகள், அவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துதல், நேர்மறைச் சிந்தனையை வளர்த்தல் மற்றும் மாணவர்களுக்கு உகந்த நேர்மறைக் கற்பித்தல் அணுகுமுறைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதுடன், மாணவர்களிடையே நேர்மறைச் சிந்தனையை வளர்த்து, அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





