• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் மற்றும் நல்லூர் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் மற்றும் நல்லூர் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு

———- ஹஸ்பர் ஏ எச் 

திருகோணமலை,மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் மற்றும் நல்லூர் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நேற்று (14) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இத்தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 688 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரச காணிகளில் விவசாயம் மேற்கொண்டு வரும் மக்களில், அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த 33 பேர், ஏற்கனவே நடைபெற்ற காணிக் கச்சேரியின் போது காணிகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

ஏனையோரின் விண்ணப்பங்களும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக மீளாய்வு செய்யப்படும் என்றும், உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்குத் தேவைக்கேற்ப காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

காணி வழங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் காணிக் கச்சேரிகள் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அவ்வாறு செயற்படத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாகாண காணி ஆணையாளர் வி. ரவீந்திரன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மூதூர் பிரதேச செயலாளர், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராம சேவகர்கள் மற்றும் காணிப் பிரச்சினைக்கு முகங்கொடுத்த மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share the Post: