• Home
  • உள்ளூர் செய்திகள்
  • டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: பொத்துவிலில் விழிப்புணர்வுப் பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பம்!

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: பொத்துவிலில் விழிப்புணர்வுப் பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பம்!

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகமொன்றை கட்டியெழுப்பும் உயரிய நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின்” அம்பாறை மாவட்ட இறுதி நாள் நிகழ்வு (09) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து வெகு விமர்சையாக ஆரம்பமானது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் பி. பசூர்கான் அவர்களின் சீரிய ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருமான கௌரவ முஷர்ரஃப் முத்துநபீன் அவர்கள் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

இவ்விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு நடவடிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேரணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், பொத்துவில் வைத்தியசாலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), பாதுகாப்புப் படையினர், பிரதேச சபை ஊழியர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஆதரவு நல்கினர்.

Share the Post: